Oct 23, 2026 - 01:11 PM

ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரையும் பொறியியலாளரான அவரது மகனையும் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐவரைப் பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர், திஹகொட பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (22) கைது செய்யப்பட்டிருந்தனர்.
கிரிந்த நகரிலுள்ள வீதியொன்றில் மதில் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கமே இந்தச் சம்பவத்திற்கு மூலகாரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையின் பொறியியலாளரான மகன் கார் ஒன்றை விலைக்கு வாங்கி வீட்டிற்குக் கொண்டு வந்ததையடுத்து, பக்கத்து காணியில் வசிக்கும் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குறித்த காரை வெளியிலெடுக்க முடியாதவாறு தடையாகச் சுவரொன்றின் பகுதியை அமைத்துள்ளார்.
அந்த உத்தியோகத்தர் சில நாட்கள் விடுமுறை பெற்று இந்த சுவர் கட்டுமானத்தைச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைவாக, சுவரின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து கலந்துரையாடவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தேவையான அறிக்கையொன்றைத் தயார் செய்ய வேண்டியுள்ளதாகக் கூறி, பிரதேச சபை தவிசாளர் ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் அவரது மகனை நேற்று பிரதேச சபைக்கு அழைத்துள்ளார்.
அங்கு இவ்விருவரையும் பிரதேச சபையின் அறையொன்றிற்குள் பூட்டி வைத்து உடல் மற்றும் உள ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் அவரது மகன் திஹகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சட்டத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தவிசாளர் மற்றும் அதிகாரிகள் உட்பட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், கைது செய்யப்பட்ட கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட சந்தேகநபர்களை சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
































