Oct 24, 2026 - 09:28 PM

PHP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் இணைய பயன்பாடுகளில் நிலவும் தீர்மானமிக்க பாதுகாப்பு பலவீனங்கள் காரணமாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள அமைச்சு, இது தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த அறிவித்தலில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதாவது: CVE-2026-109618 மற்றும் CVE-2026-109619 ஆகிய அடையாளக் குறியீடுகளால் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு பலவீனங்கள் காரணமாக, அமைப்புகளுக்குள் (Systems) அனுமதியின்றி பிரவேசித்தல், தரவுகளைத் திருடுதல் மற்றும் முறைமைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகியவற்றின் கடுமையான அபாயம் நிலவுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்காக உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
i. PHP நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைத்து முறைமைகள் மற்றும் இணைய பயன்பாடுகளை அடையாளம் கண்டு, அவை இயங்கும் பதிப்புகளை (Versions) உறுதிப்படுத்த வேண்டும்.
ii. இந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்காக வெளியிடப்பட்டுள்ள மென்பொருள் திருத்தங்களை (Software patches) பயன்படுத்தி, உரிய நடைமுறைகளுக்கு அமைவாக முறைமைகள் மற்றும் இணைய பயன்பாடுகளை உடனடியாக புதுப்பிக்க (Update) வேண்டும். இதற்காக PHP இன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் (https://www.php.net) வழங்கப்பட்டுள்ள புதுப்பித்தல் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
iii. அசாதாரணமான செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக முறைமை உள்நுழைவுத் தரவுகளை (System logs) பகுப்பாய்வு செய்யவும்.
iv. உடனடியாக புதுப்பிக்க முடியாத அதிக அபாயம் கொண்ட முறைமைகளின் இணையப் பிரவேசத்தைக் கட்டுப்படுத்தவும் அல்லது அவற்றை இணையத்திலிருந்து துண்டிக்கவும்.
அத்துடன், இந்த அமைச்சின் கீழ் இயங்கும் GovTech Sri Lanka நிறுவனம் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறியும் கருவி ஒன்றை (Vulnerability detector) அபிவிருத்தி செய்துள்ளதுடன், அது www.govtech.lk/cvesecure ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இணையதளமொன்றில் PHP பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா என்பதைப் பரிசோதிப்பதற்கும், தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கும் இலங்கை CERT நிறுவனத்துடன் தொடர்புகொள்வதற்கு அந்தந்த இணையதளங்களுக்குப் பொறுப்பான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, தயவுசெய்து 0112497900 / samithnp@govtech.lk ஊடாக GovTech Sri Lanka நிறுவனத்தையோ அல்லது 0112691692 / info@ncsoc.gov.lk ஊடாக Sri Lanka CERT நிறுவனத்தையோ தொடர்புகொள்ளவும்.
































