Oct 25, 2026 - 12:58 PM

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) 200 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட காலத்திற்குள் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு, பயன்பாட்டிற்குப் பிந்தைய முகாமை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட கணக்காய்வு அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு பெருநகரப் பகுதி மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைக்காக இந்த 200 மின்சார பேருந்துகளையும் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
எரிபொருள் இறக்குமதியைக் குறைத்தல், காற்று மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையைச் சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாதவாறு மாற்றுதல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
இருப்பினும், மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக 10 ஏலதாரர்கள் விருப்பம் தெரிவிக்கும் ஆவணங்களை வாங்கியிருந்த போதிலும், ஒரே ஒரு ஏலதாரர் மட்டுமே முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளார் என்பது தணிக்கையில் தெரியவந்துள்ளது.
ஆனால், அந்த ஏலதாரர் போலி பணிப் பிணைப் பத்திரத்தைச் (Fake Performance Bond) சமர்ப்பித்ததன் காரணமாக அவர் தகுதியற்றவராக ஆக்கப்பட்டார் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி குறித்த கொள்முதல் செயல்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதியாகியும் மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கும் அவற்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவோ அல்லது நிறைவு செய்யப்படவோ இல்லை எனத் தணிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல் நிர்வாகத்தில் காணப்பட்ட பலவீனங்கள், ஏலதாரர்களை மதிப்பீடு செய்வதில் இருந்த குறைபாடுகள், அவசரகால சூழ்நிலைகளுக்கான மாற்று கொள்முதல் திட்டங்கள் இல்லாதிருந்தமை மற்றும் போக்குவரத்து அமைச்சு, திறைசேரி மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகியவற்றுக்கு இடையே நிலவிய பலவீனமான ஒருங்கிணைப்பு ஆகியவையே இத்திட்டம் தாமதமடைந்ததற்குக் காரணம் எனத் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்கள் தாமதமாவதால், எரிபொருள் இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் நகர்ப்புறக் காற்று மாசுபாட்டைக் குறைத்தல் போன்ற எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைப் பெறுவதும் தாமதமாகி உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
































