Oct 27, 2026 - 03:52 PM

2024 சீசனில் ருதுராஜ் சென்னை அணியின் புதிய அணி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, சிஎஸ்கே முந்தைய வெற்றிகளை மீண்டும் பெற முடியாமல் தடுமாறி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தூணாக விளங்குபவருமான எம்.எஸ். தோனி (MS Dhoni), மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் இறங்குவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே மீண்டும் உருவெடுத்துள்ளது. 45 வயதாகும் தோனி, ஐபிஎல் 2027 சீசனில் பங்கேற்பது குறித்துத் தனது உடற்தகுதி (Fitness) தான் இறுதி முடிவைத் தீர்மானிக்கும் என்ற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் உடற்தகுதிப் பிரச்சனைகள் காரணமாகத் தோனி ஐபிஎல் 2026 சீசன் முழுவதையும் தவறவிட்டார். இந்நிலையில், 2027 சீசனில் விளையாடுவது குறித்துப் பேசிய தோனி, தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பதிலளித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
"வைத்தியப் பரிசோதனைகளை முடித்து வைத்திய அறிக்கை வந்த பிறகு, மேலும் ஒரு சீசன் விளையாடும் அளவுக்கு எனது உடல் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை வரவிருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் நான் பார்க்க வேண்டும். ஒருவேளை நான் விளையாடும் தகுதியில் இல்லை என்றால், இந்த பழைய 'விண்டேஜ் வண்டியை' வீதியில் நன்றாக ஓட வைக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க வைத்தியர்களிடமே உள்ளது. அதனால் அனைத்து அழுத்தமும் அவர்கள் மீதுதான் இருக்கிறது" என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதிலிருந்து ஐபிஎல் வீரர் ஏலத்திற்கு முன்பாக, அதாவது டிசம்பர் மாதத்திற்குள் தனது முடிவை அவர் அறிவிப்பார் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில சீசன்களாக சிஎஸ்கே அணியில் தோனியின் பேட்டிங் வரிசை மற்றும் பங்களிப்பு சற்றே குறைக்கப்பட்டிருந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை மட்டுமே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த சிறந்த பேட்டர்களில் ஒருவராக தோனி தொடர்கிறார். அவர் இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 38.30 சராசரியுடன் 5,439 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்களும் அடங்கும். கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 (CLT20) கோப்பைகளையும் பெற்றுத் தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2024 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் புதிய அணி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, சிஎஸ்கே அணி முந்தைய வெற்றிகளை மீண்டும் பெற முடியாமல் தடுமாறி வருகிறது.
தோனி தலைமையில் 2023 இல் கடைசியாகச் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, அதன் பிறகு ஐபிஎல் 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும் (10 ஆவது இடம்), அதைத்தொடர்ந்து 2026 சீசனில் 8 ஆவது இடத்தையும் மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் தோனியின் வருகை மற்றும் வழிகாட்டுதல் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் தேவையான ஒன்றாக மாறியுள்ளது.
































