Oct 27, 2026 - 05:49 PM

லாகூரில் நடைபெற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 25.3 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அந்த அணி சார்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களையும், ஹசன் நவாஸ் 17 ஓட்டங்களையும், தலைவர் ஷஹீன் ஷா அப்ரிடி 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேலும் சஹான் அரச்சிகே 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, எஷான் மாலிங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி, 18.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடிய கமிந்து மெண்டிஸ் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), பவன் ரத்நாயக்க ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 16 ஓட்டங்களையும், தலைவர் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அரஃபாத் மின்ஹாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி 191 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, தொடரின் இறுதி லீக் போட்டியில் எதிர்வரும் 29 ஆம் திகதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, 31 ஆம் திகதி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































