Oct 28, 2026 - 12:55 PM

ஒப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியத் தலைநகர் டெல்லியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கடந்த 20 ஆம் திகதி வெளியிட்ட இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நடப்பாண்டின் இறுதியில் முதன்முறையாக நடத்தப்படும் "நாகரிகப் பேச்சுகளுக்கான கருத்தரங்கில்" (Civilisational Dialogue) அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் உட்பட 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசார அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு (Aurangzeb Khan Khichi) இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், பலதரப்பு நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கான அழைப்புக்கும், பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என இந்திய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிலேயே பாகிஸ்தான் இறுதியாகப் பங்கேற்றிருந்தது.
கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் பதற்றம் நிலவியது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 4 நாட்களுக்கு 'ஒப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியத் தரப்பினால் தீவிர இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எல்லை கடந்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், அண்மையில் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில், பாகிஸ்தான் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான இஷாக் தார் முன்னிலையிலேயே பயங்கரவாத ஒழிப்பு குறித்துப் பேசிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பாகிஸ்தானை நேரடியாக விமரிசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
































