Oct 28, 2026 - 10:18 PM

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஊரகஹ இந்திக' என்ற இந்திக சம்பத், டுபாய் நாட்டில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக மேலதிக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை எனினும், பிரதான குற்றவாளியான இவரை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கையின் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி கரந்தெனிய பிரதேசத்தில், இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரோஷன் குமார சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான திட்டமிடலை மேற்கொண்டுள்ளவர் இந்த 'ஊரகஹ இந்திக' என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.
இக்குற்றச் செயலுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சம்பவத்திற்குப் பிறகு சில மாதங்களுக்குப் பின்னர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதுடன், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டில் வசிக்கும் குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இந்த PHI கொலைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
































