Oct 28, 2026 - 11:04 PM

ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த நபர் தொடர்பான விடயத்தில், கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் செயற்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, தாம் மேற்கொண்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக வெளியான தகவல்களைக் கருத்தில் கொண்டு ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணையைத் தொடங்கியது.
அதன்படி, ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொண்டதுடன், உயிரிழந்தவரின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொலிஸ் காவலில் 39 பேர் உயிரிடைந்துள்ளதுடன், பொலிஸாருடனான மோதல்கள் காரணமாக மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.
இந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பில் செயற்பட வேண்டிய முறைமை குறித்தான வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டு, பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், இச்சம்பவத்தின் போது ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படவில்லை என்பது வெளிப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸ் காவலில் நபர்கள் உயிரிழப்பது தொடர்பில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகளை நாளை பிற்பகல் 1.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளது.
இதுதவிர, உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அழைப்பதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்தவரின் உடல் நேற்று (27) இரவு கிரிவத்துடுவை மூணமலேவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவுள்ளன.
































