Oct 29, 2026 - 04:44 PM

ஸ்பெயினில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சிவில் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை மாட்ரிட் (Madrid) நகரிலிருந்து செவில் (Seville) நோக்கி பயணித்த அதிவேக ரயில் ஒன்று, பாதையில் நின்று கொண்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதியதில் இந்த பயங்கர விபத்து சம்பவித்தது.
ஐரோப்பாவின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் இச்சம்பவத்தையடுத்து, ஸ்பெயின் நாடு முழுவதும் மூன்று நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ரயில் சாரதிகளுக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையே இடம்பெற்ற உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் ஸ்பானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அந்த ஒலிப்பதிவுகளின்படி, சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் மற்றொரு ரயில் பழுதுபட்டு நின்று கொண்டிருந்தபோதிலும், பின்னாலிருந்து வந்த அதிவேக ரயிலுக்கு பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதேவேளை, காணாமல் போன குடும்ப உறுப்பினர்களைத் தேடி வரும் உறவினர்கள், மரபணு மாதிரிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் மையங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
































