Nov 1, 2026 - 04:35 PM

கடவத்த பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனின் தாயார் வெளியிட்ட கூற்றுத் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
நேற்று (31) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர்கள் "போதைப்பொருள் கடத்தினார்கள்" எனப் பொலிஸார் கூறியதாக அந்த தாயார் ஊடகங்களுக்குத் தெரிவித்த கூற்று முற்றிலும் பொய்யானது என இன்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் சமிக்ஞைக்கு வாகனத்தைச் நிறுத்துவது அல்லது கீழ்ப்படிவது சட்டத்தின்படி எந்தவொரு சாரதியினதும் கடமையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ரோந்து மற்றும் சோதனைகளின் போது பொலிஸாரின் சமிக்ஞைக்கு கீழ்ப்படிந்து வாகனங்களை நிறுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இதனால் தற்காலிக அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதியே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக வலியுறுத்தினார்.
அத்துடன், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத அல்லது உரிய வயதை எட்டாத சிறுவர்களுக்கு வாகனங்களைச் செலுத்த அனுமதிப்பது குற்றமாகும் எனத் தெரிவித்த அவர், கடவத்த சம்பவத்தின் போது அவ்வாறு உரிய வயதை அடையாத சிறுவனுக்கு குறித்த முச்சக்கரவண்டியைச் செலுத்த சந்தர்ப்பம் வழங்கிய நபருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வயது வந்தவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் என்ற ரீதியில் பொறுப்புடன் செயற்படுமாறும், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகளுக்கு இலங்கை பொலிஸாருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இதற்கமைய, நாடு முழுவதும் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் கைதுகள், அவசர சோதனைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றவாளிகள், துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களைக் கைது செய்வதற்காகவே இந்த விசேட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்குப் பொதுமக்களிடம் இருந்து பெரும் ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
































