Nov 1, 2026 - 04:41 PM

கொபெய்கனே பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரை நாளை (2) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிகவெட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி இன்று (1) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர், கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி மதியவேளையில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் இரண்டு நாட்களாக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 27 ஆம் திகதி இரவில் திடீர் சுகவீனம் காரணமாக நிகவெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.
இதேவேளை, உயிரிழந்த நபர் பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தமைக்குப் பின்னர், அவரைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்த ஐந்த கிராமவாசிகளையும் கொபெய்கனே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டுள்ள கிராமவாசிகளின் உறவினர்கள் பொலிஸாருக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
சந்தேகநபரைப் பிடித்தவர்கள் மரத்தில் கட்டிவைத்து ஒரு மணி நேரத்திற்குள் பொலிஸாருக்கு அறிவித்து, எந்தவிதமான ஆபத்துமின்றி பாதுகாப்பாக அவரைப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு ஒப்படைக்கும்போது ஏதேனும் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தாலும்கூட, அவர் இறப்பதற்கு முன்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு இருந்திருக்க வேண்டும் என உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னரும் குறித்த நபரின் திருட்டுச் செயல்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது பொலிஸாரே அவரைப் பிடித்துத் தன்னிடம் கொண்டுவந்து ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கொபெய்கனே பொலிஸாரும் ஏனைய சட்ட அமுலாக்க நிறுவனங்களும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
































