Nov 2, 2026 - 09:21 AM

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பைனான்ஸ் (Binance) மீதான இணையவழி தாக்குலில் சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் தனது பணப் பரிமாற்றச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
சேவைகள் மீளமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயனர்கள் இதுவரை சுமார் 3.64 பில்லியன் டொலர் (சுமார் 2.1% சொத்துகள்) நிதியைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
திருடப்பட்ட தொகையில் 95% சொத்துகளை நிறுவனம் தனது சொந்தக் கையிருப்புப் பணத்தைக் கொண்டு ஈடுசெய்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இதற்காகத் தனது 'பயனர்களுக்கான பாதுகாப்பான சொத்து நிதி' (SAFU), ஃபியூச்சர்ஸ் காப்பீட்டு நிதி மற்றும் நிறுவனத்தின் திறைசேரி நிதியிலிருந்து சுமார் 6.34 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டு, மாற்று டோக்கன்கள் வாங்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவை முன்னுரிமையடிப்படையில் பிட்கொயின் (BTC), ஈத்தரியம் (ETH), டொக்ஈகொயின் (DOGE) மற்றும் ஸ்திரமான நாணயங்களான USDT, USDC உள்ளிட்ட 15 முக்கிய கிரிப்டோ நாணயங்களுக்கான பணப் பரிமாற்றங்கள் முதற்கட்டமாகத் திறந்துவிடப்பட்டுள்ளன.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI), இந்தத் தாக்குதலுக்கு வடகொரிய அரசு ஆதரவு பெற்ற 'டிரேடர் ட்ரைட்டர்' (TraderTraitor) என்ற ஹெக்கிங் குழுவே காரணம் என உறுதிப்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட சொத்துகளை ஈத்தரியம் (ETH) நாணயங்களாக மாற்றி, பரவலாக்கப்பட்ட நிதித் தளங்கள் (DeFi) மூலம் சட்டவிரோதமாக சலவைசெய்ய (Laundering) முயற்சிப்பதாக எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
இருப்பினும், இதில் வடகொரியாவின் பங்கு குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், அது உண்மையெனில் அது குறித்து வடகொரியாவிடம் பேசப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலால் வீழ்ச்சியடைந்த பிட்கொயின் (Bitcoin) விலை மீண்டும் மீண்டு வந்து தற்போது 78,000 டொலருக்கு மேல் வர்த்தகமாகிறது.
ஈத்தரியத்தின் (Ether) விலை 2,287 டொலராக உயர்ந்துள்ளது. பயனர்கள் அவசரப்பட்டுப் பணத்தை மீளப் பெறுவது தற்போது சீராகி வருவதாகவும், புதிய வைப்புகளின் (Deposits) அளவு கணிசமாக உள்ளதாகவும் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
பைனான்ஸ் இணை பிரதம நிறைவேற்று அதிகாரி யீ ஹெ (Yi He), இந்தச் குழப்பமான சூழலைப் பயன்படுத்திச் சந்தையில் புதிய போலி நிதி மோசடிகள் உருவாகி வருவதாக எச்சரித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
































