Nov 3, 2026 - 02:26 PM

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் தாயாரும் தந்தையாரும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால், அதனை விசேட காரணியாகக் கருதி அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் அண்மையில் நீதிமன்றத்தில் பிணைக்கோரிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், அந்த கோரிக்கைக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கொழும்பு, டிரான்ஸ்வேர்க் சதுக்கத்திலுள்ள காணியொன்றை இந்திய கிரிஷ் நிறுவனத்திற்கு பன்முகத் திட்டத்திற்காக வழங்குவதற்கான பணிகளைச் செய்து கொடுப்பதற்காக 70 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
































