Nov 3, 2026 - 07:57 PM

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகிய பிரிவுகளுக்குரிய குறிப்பிட்ட இரண்டு HS குறியீடுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரி இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்டங்கள் வரிச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2469/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, குறித்த அரிசி வகைகளுக்கு கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரி விதிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, உமி நீக்கப்பட்ட அரிசி (Brown Rice),பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகியவற்றுக்கு கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரி விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அந்த பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
































