Nov 4, 2026 - 10:00 PM

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையும் (SLTB) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC) இணைந்து விசேட பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளன.
இம்முறை தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பெருந்திரளான மக்கள் 6ஆம் திகதி முதல் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் கொழும்பில் இருந்து ஹட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயங்கும் பேருந்துகளின் பெரும்பாலான இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு முடிவடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் இருக்கை முன்பதிவு சேவையை நடத்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளின் இருக்கைகளும் தற்போது விரைவாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய அதிக நெரிசலைத் தவிர்த்து, தமது பயணங்களை இலகுவாக மேற்கொள்வதற்காக 1315.lk அல்லது sltbeseat.lk ஆகிய இணையதளங்களுக்கு பிரவேசித்து முன் கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
































