Nov 5, 2026 - 03:30 PM

நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் 190 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஜெப்ரி மொஹமட் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இன்று (05) உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாம் மற்றும் எட்டாம் சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிரான ஆட்சேபனைகளை இன்று தாக்கல் செய்ததாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இதன்போது நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணையில் தேவையான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்களைப் பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் அவற்றின் அடித்தளத்தை அமைப்பதற்கும் பங்களித்த நபர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது முதலாம் சந்தேகநபரான ஜெப்ரி மொஹமட் மற்றும் எட்டாம் சந்தேகநபர் தொடர்பிலும் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும், வங்கி அதிகாரிகளுக்கும் விசாரணைக்குட்பட்ட நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து மேலும் பரிசோதிப்பதற்காக உரிய வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்துக் காரணிகளையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்கள் தொடர்பிலான பிணை உத்தரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.
































