Nov 5, 2026 - 03:38 PM

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று (05) உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, வெகுசன ஊடக அமைச்சராகப் பதவியில் இருந்துகொண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சுமார் பத்து இலட்சம் ரூபாய் (ரூ. 990,000) பணத்தைச் செலவிட்டு அரசியல் நடவடிக்கைகளுக்காக 600 ஜி.ஐ. (GI) குழாய்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த பின்னரே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
































