Nov 6, 2026 - 11:56 AM

இலங்கையின் முன்னணி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை ஆடை வர்த்தக நாமமான கார்னேஜ் (CARNAGE), செனகல் தலைநகர் டாக்கரில் நடைபெற்று வருகின்ற 4ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக கைகோர்த்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதிலும், உள்ளூர் திறமைகளை ஊக்குவிப்பதிலும் தனது பங்களிப்பை கார்னேஜ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமின்றி, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுடன் கார்னேஜ் நிறுவனம் மேற்கொண்டுள்ள விரிவான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகவே இந்த அனுசரணை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் தடகளம், நீச்சல், பெட்மிண்டன் மற்றும் டைக்வாண்டோ ஆகிய நான்கு விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக ஐந்து வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து கார்னேஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜொயல் திலகரத்ன கருத்து தெரவிக்கையில், “இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பது எப்போதும் கார்னேஜ் நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வருகிறது. நமது நாட்டில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் முழுமையான திறமையை வெளிப்படுத்த சரியான வழிகாட்டலும் ஆதரவும் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம். இலங்கையின் முன்னணி வர்த்தக நாமம் என்ற வகையில், வீரர்கள் சர்வதேச தளத்தை எட்டிய பிறகு மட்டும் அவர்களைக் கொண்டாடாமல், அவர்களின் வளர்ச்சிப் பயணத்திலேயே உடன் நிற்பதை எமது பொறுப்பாகக் கருதுகிறோம். எமது கூட்டாண்மைகள் மற்றும் கார்னேஜ் விளையாட்டு வீரர் அறக்கட்டளை (CARNAGE Athlete Foundation) அமைப்பின் ஊடாக, வீரர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் சர்வதேச அளவில் நம்பிக்கையுடன் போட்டியிட வழிவகை செய்வதே எங்களின் இலக்காகும்,” எனக் குறிப்பிட்டார்.
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பது என்பது வெறும் வணிக ரீதியான விளம்பரம் மட்டுமல்ல, அவர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து, அவர்களது பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதே கார்னேஜ் நிறுவனத்தின் நோக்கமாகும். வெற்றி பெறும்போது மட்டுமல்லாது, அந்த வெற்றியை எட்ட முனையும் முழுப் பயணத்திலும் வீரர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்பதில் கார்னேஜ் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கையின் முன்னணி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை ஆடை வர்த்தக நாமமான கார்னேஜ்,நாட்டின் விளையாட்டு அபிவிருத்திக்கு வழங்கி வரும் பரந்த அளவிலான அர்ப்பணிப்பிற்கு இந்த டாக்கர் 2026 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பங்களிப்பு மற்றொரு சிறந்த சான்றாகும். 'அடுத்த தலைமுறை சம்பியன் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தல்' என்ற நோக்கத்துடன் இயங்கும் கார்னேஜ் விளையாட்டு வீரர் அறக்கட்டளை ஏற்கனவே பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த வீரர்களுக்குத் தனது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கார்னேஜ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு விளையாட்டு வீரரும் சர்வதேச அரங்கில் இலங்கையின் விளையாட்டு ஆற்றலையும் பெருமையையும் பிரதிபலிக்கும் தூதுவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அத்தகைய ஆற்றலை உருவாக்குவதற்கு நிறுவனங்களின் முதலீடு, வளங்கள் மற்றும் வாய்ப்புகள் என்பன இன்றியமையாதவை. விளையாட்டு வீரர்களின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரு நிறுவனங்கள் கரம்கொடுப்பதன் மூலம், சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய ஒரு பலமான விளையாட்டு சூழலை இலங்கையில் உருவாக்க முடியும்.
































