Nov 7, 2026 - 08:23 PM

அடுத்த சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (7) மாலை 5 மணி முதல் நாளை (8) அதிகாலை ஒரு மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, களுத்துறை, கேகாலை, குருணாகல், கொழும்பு, கம்பஹா, காலி, நுவரெலியா, புத்தளம், பதுளை, கண்டி, மாத்தறை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 14 மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பலத்த மழை காரணமாக வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதுடன், வீதிகளில் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆங்காங்கே பாறைகள் சரிந்து விழக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகள், ஆற்றுப் படுகைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, மலைப்பாங்கான பாதைகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
































