Nov 9, 2026 - 10:40 AM

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்த சட்டமா அதிபர், அந்தத் திருத்தங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமானது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
குறித்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































