Nov 10, 2026 - 05:03 PM

நவம்பர் 7ஆம் திகதி, கொழும்பு போர்ட் சிட்டி ரோட்டராக்ட் கழகம், யாழ்ப்பாணம் மிட் டவுன் ரோட்டராக்ட் கழகம் மற்றும் சுன்னாகம் ரோட்டராக்ட் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, கொக்குவில் இந்துக் கல்லூரியில் மரநடுகைத் திட்டமொன்றை முன்னெடுத்தது. இதன் மூலம் தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியை யாழ்ப்பாணத்திற்கும் விரிவுபடுத்தியது. ஆலோகா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியானது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒரே அர்ப்பணிப்பைக் கொண்ட இளம் தன்னார்வலர்களை ஒன்றிணைத்தது.
இத்திட்டத்தின் நோக்கம் பாடசாலை வளாகத்தில் மரங்களை நடுவதுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. மரநடுகையின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி சமூகத்தினர் மத்தியில் எடுத்துரைப்பதுடன், ஏற்கனவே காணப்படும் பசுமையான சூழலைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது. மேலும், மூன்று ரோட்டராக்ட் கழகங்களின் பங்கேற்பின் மூலம், நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் ரோட்டராக்டர்கள் அனைவரையும் பாதிக்கும் பொதுவானதொரு சுற்றுச்சூழல் நோக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கும் வாய்ப்பையும் இம்முயற்சி ஏற்படுத்தியது.
மாறிவரும் வானிலை நிலைமைகள், அதிகரித்து வரும் வெப்பநிலை, வனப்பரப்பு குறைதல் மற்றும் காடழிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை இலங்கை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீண்டகாலத் திட்டங்களும் தொடர்ச்சியான முயற்சிகளும் தேவைப்படுகின்றன. இத்தகைய சூழலில், ஆலோகா போன்ற சமூகமட்ட முயற்சிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்களிப்பையும் அவர்களின் செயற்பாட்டு ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, சிறுவயதிலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதில் பாடசாலைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
இம்முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு போர்ட் சிட்டி ரோட்டராக்ட் கழகத்தின் தலைவர் தனுஷ், “ஆலோகா ஒரு எளிய எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. அர்த்தமுள்ள மாற்றங்கள் சிறிய செயற்பாடுகளிலிருந்தே ஆரம்பமாகின்றன. ஒரு மரத்தை நடுவது சிறியதொரு பங்களிப்பாகத் தோன்றினாலும், அது சுற்றுச்சூழலின் மீதும், எதிர்காலத் தலைமுறையினர் மீதும் நாம் கொண்டுள்ள அக்கறையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சக ரோட்டராக்டர்களுடன் இணைந்து முன்னெடுத்த இந்த முயற்சியின் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வத்துடன் பங்கேற்க மேலும் பல இளைஞர்களையும் சமூகத்தினரையும் ஊக்குவிப்போம் என நம்புகின்றோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் அனைவரதும் பொதுவான பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டுமுயற்சியானது, புவியியல் எல்லைகளைக் கடந்து சமூகங்களை ஒன்றிணைப்பதில் இளைஞர் அமைப்புகள் கொண்டுள்ள முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது. கொழும்பு போர்ட் சிட்டி ரோட்டராக்ட் கழகம் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய ரோட்டராக்ட் கழகங்களுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இளைஞர்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்குப் பொதுவான முயற்சிகள் எவ்வாறு வழிவகுக்கின்றன என்பதைப் ஆலோகா எடுத்துக்காட்டுகின்றது.
கொழும்பு போர்ட் சிட்டி ரோட்டராக்ட் கழகத்தைப் பொறுத்தவரை, ஆலோகா என்பது சமூக சேவை மற்றும் நிலையான அபிவிருத்திக்கான அதன் பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்ததன் மூலம், மரநடுகையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள மேலும் பலரை ஊக்குவிப்பதே கழகத்தின் நோக்கமாகும். கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடப்பட்ட மரங்கள் வேரூன்றி வளரும்போது, ஆலோகா எடுத்துரைக்கும் செய்தியும் தெளிவாகிறது: பசுமையான இலங்கையை உருவாக்குவது இன்று எடுக்கப்படும் தீர்மானங்களில் மட்டுமன்றி, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் முன்னெடுக்கும் செயற்பாடுகளிலும் தங்கியுள்ளது.

































