Nov 10, 2026 - 10:17 PM

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகப் பிக்குகள் குழுவொன்றினால் ருவன்வெலிசாய முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தின் போது அங்கிருந்த நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்படியான விசாரணையை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதிகளாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் பொலிஸாரால் எவ்வித முறைப்படியான விசாரணையும் நடத்தப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முறையற்ற மற்றும் சட்டவிரோதமான செயலினால் தானும் ஏனைய பிரஜைகளும் அனுபவிக்கும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் அவர் தனது மனுவின் மூலம் மேலும் கோரியுள்ளார்.
































