Nov 10, 2026 - 11:22 PM

எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில், இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவித்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் மூன்று வருடங்களில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியை எட்டுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
இதற்கமைய, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 2,000 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், முன்னர் ஜனாதிபதி குறிப்பிட்டது போல் சில தரப்பினருக்கு வரிச் சலுகைகளும் கிடைக்கும் என மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
"அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்கள் எதிர்பார்ப்பு பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சியை எட்டுவதாகும். ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே அதைச் செய்ய வேண்டும். அதற்குப் பொருத்தமான யோசனைகள் முன்வைக்கப்படும். ஜனாதிபதி ஏற்கனவே கூறியது போல், சில துறைகளில் வரிச் சலுகைகள் வழங்கப்படும். ஆனால் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது என்பதற்காக அனைத்து வரிகளையும் கைவிட முடியாது. உலகப் பொருளாதாரச் சூழலைக் கருத்திற் கொண்டு சில வரிகளை மாற்றுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில வரிகளில் சலுகைகள் கிடைக்கும். அது தவிர, ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வும் கிடைக்கும். 2025 ஏப்ரல், 2026 ஜனவரி மற்றும் 2027 ஜனவரி ஆகிய மாதங்களில் அடிப்படைச் சம்பளத்தில் உயர்வு வழங்கப்படும். அடுத்து சில துறைகளில் கொடுப்பனவுகள் அதிகரிக்கும். இவை அனைத்தையும் உள்ளடக்கியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முன்னரே கூறியது போல, இந்த வரவு செலவுத் திட்டத்தில் 2,000 பில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைவோம் என எதிர்பார்க்கிறோம். நடப்பு ஆண்டில், எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்காக மட்டுமே 98 பில்லியன் ரூபாவைச் செலவிட்டோம். 'திட்வா' நிவாரணம் வழங்குவதற்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமைகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தை நாங்கள் ஸ்திரமாகக் கொண்டு வந்தோம். இப்போது பொருளாதாரத்தை வளர்ப்பதற்குச் சில துறைகளுக்குக் கொடுப்பனவுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துதல் மற்றும் சில துறைகளின் மாற்றத்தை ஏற்படுத்தும் அபிவிருத்திக்கான சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது." என்றார்.
































