Nov 13, 2026 - 03:17 PM

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது.
இதில் அப்போதைய அணி தலைவர் ஸ்டீவன் சுமித், துணை அணி தலைவர் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே அவுஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா எழுதிய சுயசரிதை புத்தகத்தில், பந்தை சேதப்படுத்திய சதித் திட்டம் குறித்து அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்று கூறி இருந்தார்.
கவாஜாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதாக அவுஸ்திரேலிய அணி தலைவர் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.
அதன்படி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்று கவாஜா கூறியிருப்பது 100 சதவீதம் முற்றிலும் தவறானது. இதை நான் கடந்த 8 ஆண்டுகளாக கூறி வருகிறேன். அப்படி ஒரு செயல் நடந்தது எனக்கு தெரியாது.
ஆனால் கவாஜா இதை விட மிகவும் தீவிரமான ஒரு குற்றச்சாட்டை கூறி உள்ளார். நானும் மற்றவர்களும் இணைந்துதான் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தி பந்தைச் சேதப்படுத்தும் திட்டத்தை உருவாக்கினோம் என்று, இது முற்றிலும் ஆதாரமற்ற, அர்த்தமற்றதாகும்.
பான்கிராப்ட் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தும் போது, அவரிடம் கவனமாக இருக்குமாறு தான் கூறியதாக உஸ்மான் ஒப்புக்கொண்டு உள்ளார்.
இதை அறிந்து நான் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். எனக்குத் தெரிந்த கவாஜா இப்படிப்பட்டவர் அல்ல.
கடந்த 8 ஆண்டுகளில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கலாச்சாரத்தை மீண்டும் கட்டமைக்க உதவிய அணியின் ஒரு பகுதியாக இருந்த கவாஜா இத்தகைய செயலை அங்கேயே தடுத்திருக்க வேண்டும் என கம்மின்ஸ் கூறினார்.
































