Nov 13, 2026 - 03:36 PM

சுற்றுலா இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (13) மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மெட் ஹென்றியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 89 ஓட்டங்களுக்குச் சுருண்டதுடன், நியூசிலாந்து அணி 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான வில் யங் மற்றும் டிம் செய்ஃபர்ட் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டிம் செய்ஃபர்ட் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய வில் யங், 108 பந்துகளில் 125 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
இவருக்குத் துணையாக, பின் ஆலன் 41 ஓட்டங்களையும், அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 24 ஓட்டங்களையும் சேர்த்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 333 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய தரப்பில் அக்சர் படேல், ஆகிப் நபி மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
334 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மெட் ஹென்றி வீசிய போட்டியின் முதல் ஓவரிலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஓட்டமெதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி முதல் ஓவர் முடிவில் ஓட்டமெதுவும் இன்றி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அத்துடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா பரிதவித்தது.
நடுவரிசையில் இஷான் கிஷன் 27 ஓட்டங்களையும், அக்சர் படேல் 21 ஓட்டங்களையும், நமன் தீர் 21 ஓட்டங்களையும் எடுத்தாலும், நியூசிலாந்து பந்துவீச்சை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இறுதியில் 26.4 ஓவர்களில் இந்திய அணி 89 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அபாரமாகப் பந்துவீசிய மெட் ஹென்றி 9.4 ஓவர்களில் 27 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேத்யூ ஃபிஷர் 3 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
எவ்வாறாயினும், தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற அடிப்படையில் முன்னியைில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
































