Nov 14, 2026 - 11:22 AM

எட்டு தோட்டாக்கள் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் வெற்றி நடிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நேற்று (13) வெளியாகியுள்ள படம் 'பிளாக் கோல்ட்", மூர்த்தி என்பவர் தயாரித்து, படத்தில் பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிளாக் கோல்டு எனப்படும் தலைமுடி வியாபாரம், இரண்டு குழு மோதல், அப்பா மகன் பாசம் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. அப்பாவாக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் படத்தின் பிரஸ் ஷோ முடிந்ததும் படக்குழுவினர் மீடியாவை சந்தித்தனர். அப்போது கதறி அழுதார் தயாரிப்பாளர் மூர்த்தி, அவர் அழுகை பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மீடியா முன்னிலையில் கதறி அழுதார்.
மேலும் அவர் கூறுகையில்,
"முதல் படத்தை தயாரித்துள்ளேன். நான் சேமித்து வைத்த ஒட்டுமொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்துள்ளேன். மக்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்.” எனக் கூறி கதறி அழுதார்.
அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர். பல ஆண்டுகால சினிமா மீதான காதலால் தனது சேமிப்புகள் அனைத்தையும் இப்படத்தில் முதலீடு செய்ததாகவும், பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமானதால் பெரும் கடன் சுமையில் சிக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
படத்தை முடித்துவிட்டாலும், அதனைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் பணமின்றித் தவித்ததையும், சினிமா துறையில் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் படும் அவதிகளையும் அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.
































