Nov 14, 2026 - 05:07 PM

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை வருத்தத்திற்குரிய விடயமாகும் என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுகாதாரத் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு உட்பட்ட சுமார் 2,400 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றுவதாகவும், இந்த அதிகாரிகள் நாடு முழுவதும் தமது கடமைகளை முன்னெடுக்கும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஏனைய தரப்பினருக்குத் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள ஏனைய கள உத்தியோகத்தர்களின் அலுவலகக் கொடுப்பனவு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், 10 முதல் 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பாரிய பகுதிக்கு பொறுப்பாக உள்ளதும், கள அலுவலகம் ஒன்றைப் பராமரிக்க வேண்டியதுமான பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அலுவலகக் கொடுப்பனவு குறித்து இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 10 முதல் 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்ட பாரிய பகுதியில் நாளொன்றுக்கு சுமார் 100 கிலோமீற்றர் தூரம் பயணித்து கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பயணச் செலவுக் கொடுப்பனவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிள்களைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ள போதிலும், இதுவரை மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கப்பெறாத அனைத்துப் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் எதுவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சேவையை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், நிலவும் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவே துரித தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மேலும் வலியுறுத்தியுள்ளது.
































