Nov 14, 2026 - 01:35 PM

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள 'ஓ.ம்' (O.M) திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி (Trailer) நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது யூடியூப் தளத்தில் (YouTube Trending) முதலிடம் பிடித்துள்ளது.
‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' (Wunderbar Films) மற்றும் 'ஆர்டேக் ஸ்டூடியோஸ்' (Rtake Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இவரது இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’ மற்றும் ‘ஃபா... ஃபா...’ ஆகிய மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், படத்திற்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று (13) மாலை 7.00 மணிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சில காரணங்களால் தாமதமாகி நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது.
வெளியான குறுகிய நேரத்திலேயே ரசிகர்களின் பேராதரவுடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகப் படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, இப்படத்திற்கு ஆரம்பத்தில் ‘ஓம் சேப்டர் 1: உதிரம் தி ப்ளட் வுட்’ (OM Chapter 1: Udhiram The Blood Wood) எனப் பெயரிடப்பட்டிருந்த போதிலும், தணிக்கைக் குழு (Censor Board) தொடர்பான சிக்கல்கள் காரணமாகத் தற்போது ‘ஓம்: ஆபரேஷன் மோல்’ (O.M: Operation Mole) எனத் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































