Nov 15, 2026 - 11:47 AM

அரச சேவையில் கால்நடை வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை, வரவு-செலவுத் திட்டத்தில் பொருத்தமான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் 17 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச சேவையில் 931 கால்நடை வைத்திய அதிகாரிகள் இருக்க வேண்டிய போதிலும், தற்போது சேவையில் சுமார் 600 அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்தார்.
குறித்த அதிகாரிகள் 931 அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய கடமைப் பங்கை ஆற்றி வந்தாலும், அதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு மதிப்பளிப்பும் அல்லது நியாயமான கொடுப்பனவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மேலதிக கடமைக்கொடுப்பனவு வழங்குமாறு அரசாங்கத்திற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் வரவு -செலவுத் திட்டத்தில் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் தலைவர் கூறினார்.
கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு ஏனைய அரச அதிகாரிகளுக்குக் கிடைக்கும் அடிப்படை அலுவலக வசதிகள் கூட கிடைக்காத நிலை காணப்படுவதுடன், சில பகுதிகளில் பழுதடைந்த அலுவலகங்களிலோ அல்லது வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட இடங்களிலோ சேவைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், களக் கடமைகளுக்காக போதுமான உத்தியோகபூர்வ வாகனங்கள் இல்லாத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சொந்த வாகனங்களிலோ அல்லது முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தியோ கடமைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களமானது நாட்டின் மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பெரும் பங்களிப்பை வழங்கும் நிறுவனமாகும் எனச் சுட்டிக்காட்டிய தலைவர், அத்தேவையில் 90 சதவீதத்திற்கும் 95 சதவீதத்திற்கும் இடைப்பட்ட பகுதி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாய மக்கள் மூலமாகவே வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த விவசாய மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கான பிரதான பொறுப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், இத்தகைய முக்கியமான சேவையை வழங்கும் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இப்பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சின் செயலாளருக்கும் அமைச்சர் லால் காந்தவுக்கும் பல சந்தர்ப்பங்களில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக உரிய தலையீடு எதுவும் செய்யப்படவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தினார்.
































