Nov 15, 2026 - 11:58 AM
By நுவரெலியா நிருபர் ஆர்.எப்.எம்.சுஹெல்
By நுவரெலியா நிருபர் ஆர்.எப்.எம்.சுஹெல்

சுற்றுலாத்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 'Women in Tourism' (WIT) எனும் புதிய திட்டம் உத்தியோகபூர்வமாக நுவரெலியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜெனஸ் டி போயர் (Jennes de Boer) மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் ஆகியோரின் தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'சுற்றுலாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை உடைத்தெறிதல்' (Breaking Barriers for Women in the Tourism Industry) எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்படும் பெண்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல், சமூக அங்கீகாரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியன நோக்கங்களாகக் கொண்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 30 பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களை உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகளாகப் பணியாற்றுவதற்குப் பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக நுவரெலியாவில் ஒரு மாதகால ஆரம்பகட்டப் பயிற்சியும், அதனைத் தொடர்ந்து கண்டியில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் (SLITHM) நான்கு மாதகால வதிவிடப் பயிற்சிப் பாடநெறியும் நடத்தப்படவுள்ளன.
நெதர்லாந்து தூதரகத்திற்கும் பெரெண்டினா நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA), சுற்றுலா வழிகாட்டிகள் சங்கங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படுகின்றனர்.
இந்நிகழ்வில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் ஷாலிகா லிந்தகும்புர, நுவரெலியா பிரதேச செயலாளர் லஹிரு கலுகம்பிட்டிய, தலவாக்கலை பிரதேச செயலாளர் சதுரங்கனி மற்றும் பெரெண்டினா நிறுவனத்தின் தலைவர் அனுர அத்தபத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
































