Nov 17, 2026 - 03:19 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி, ஐபிஎல் தொடரிலிருந்து வீரராக வாழ்க்கைக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஆலோசகராக (Mentor) அவர் பொறுப்பேற்க உள்ளதாக அணியின் சமூக ஊடக பக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு நிறைவு நாளன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 5 ஐபிஎல் கிண்ணங்களுடன் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு புகழ்பெற்ற வீரரின் சரித்திர சாதனைக் காலம் நிறைவுக்கு வந்துள்ளது.
தோனியின் இந்த புதிய பொறுப்பு மாற்றம் குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் குறிப்பிடுகையில், "எம்.எஸ். தோனி இல்லாத சென்னை அணி இல்லை.
கடந்த இரண்டு தசாப்தங்களாக வெற்றிகள், சறுக்கல்கள் என எல்லாவற்றையும் கடந்து நாங்கள் ஒருவருக்கொருவர் பக்கபலமாக வளர்ந்துள்ளோம்.
எங்களுக்கிடையேயான உறவு இவ்வளவு வலுவாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான், நாங்கள் எப்போதுமே ஒருவரின் நோக்கத்தை சந்தேகப்பட்டதில்லை.
2008ஆம் ஆண்டில் தோனி சென்னை அணியில் இடம்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
நான் எடுத்ததிலேயே அதுதான் மிகச்சிறந்த முடிவு என்பதை காலம் நிரூபித்துள்ளது.
அவர் அணிக்காகச் செய்த சாதனைகளுக்காக அல்ல, அவர் எத்தகைய அற்புதமான மனிதர் என்பதற்காகவே அதைச் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், "தோனி எப்போதும் எங்களின் அடையாளமாக இருப்பார், இது எப்போதும் அவருடைய இல்லமாகத்தான் இருக்கும்" என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில், "ஒரு கிரிக்கெட் வீரராக தோனி சாதித்தவை ஒவ்வொரு ரசிகரின் நினைவிலும் ஆழமாகப் பதிந்துள்ளன.
மேலும், "மஞ்சள் நிற ஜெர்சியில் அவர் களத்தில் விளையாடுவதை நாங்கள் மிஸ் செய்வோம் என்றாலும், அவர் தொடர்ந்து நமது வீரர்களுக்கு வழிகாட்டுவார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த பந்தம் மேலும் பல ஆண்டுகளுக்கு வளர்ந்து அணியை வலிமைப்படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


































