Nov 17, 2026 - 04:03 PM

தனித்து வசிக்கும் முதியவர்கள், குற்றவாளிகளின் எளிதான இலக்குகளாக மாறுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர்.
பிள்ளைகள் வேலைவாய்ப்புக்காக வெளியேறுதல், வெளிநாடுகளுக்குச் செல்லுதல் அல்லது வேறு மாகாணங்களில் வசித்தல் போன்ற காரணங்களால் முதியவர்கள் வீடுகளில் தனித்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகக் பொலிஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, போதைப்பொருளுக்கு அடிமையான நபர்கள் பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இத்தகைய வீடுகளை இலக்கு வைப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் அத்தகைய குற்றங்கள் படுகொலைகள் வரை தீவிரமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதியவர்களைப் பராமரிப்பதற்காக வெளிநபர்களையோ அல்லது வீட்டுப் பணியாளர்களையோ பணியில் அமர்த்தும்போது, அவர்களின் பின்னணியைச் சரிபார்த்து பொலிஸ் அறிக்கையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அவசர சந்தர்ப்பங்களில் தொடர்புகொள்வதற்காக 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம், 1990 'சுவசாரிய' சேவை உள்ளிட்ட அத்தியாவசிய தொலைபேசி இலக்கங்களை வீட்டில் எளிதில் பார்க்கக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனித்து வசிக்கும் முதியவர்கள் குறித்து கிராம அலுவலருக்கும், சமுதாய பொலிஸ் குழுவுக்கும் அறிவித்தல், அயலவர்களுடன் சுமுகமான உறவைப் பேணுதல், எளிதில் பயன்படுத்தக்கூடிய கைப்பேசியை வழங்குவதுடன், வீட்டைச் சுற்றிலும் இரவு வேளையில் போதுமான வெளிச்சத்தைப் பேணுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அறியப்படாத நபர்களை வீட்டிற்குள் அழைப்பதைத் தவிர்ப்பதுடன், பெற்றோர்கள் மற்றும் முதியவர்களைத் தனிமைப்படுத்துவதைக் குறைத்து அவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

































