Nov 19, 2026 - 01:26 PM

இரண்டரை நூற்றாண்டுகளுக்குமதிகமான சேவை, தியாகம், மற்றும் மரைன் படைப்பிரிவின் அடிப்படை விழுமியங்களான கௌரவம், துணிச்சல், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீதான அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில், நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற மரைன் படையின் வருடாந்த பிறந்த நாள் விருந்துபசார வைபவத்தில், அமெரிக்க மரைன் படையின் 251 ஆவது பிறந்த நாளினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது.
நிகழ்வினை ஏற்பாடு செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் அவர்கள், பல்வேறு தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை முழுவதிலிருந்தும் வருகை தந்த நண்பர்களுடன் இணைந்து அதில் கலந்துகொண்ட பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொன்ந்த, மற்றும் ஏனைய இராணுவ பிரமுகர்கள் உள்ளிட்ட இலங்கையின் பாதுகாப்பு துறையினைச் சேர்ந்த தலைவர்களை வரவேற்றார்.
தான் சேவை செய்யும் தேசத்தை விடவும் பழமையான மரைன் படையானது, அமெரிக்காவின் முதன்மையான, எப்போதும் தயார் நிலையிலிருக்கும் ஒரு படையணியாக ஒரு பெருமைமிக்க பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ளது. அமெரிக்கா தனது சுதந்திரத்தின் 250 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், வரலாறு முழுவதும் நாட்டின் அழைப்பிற்குப் பதிலளித்து, இன்றும் நிலைத்திருக்கும் ஒரு சிறந்த பாரம்பரியத்தை பேணிவரும் மரைன் வீரர்களைக் கௌரவிக்கும் வகையிலான இவ்வருட கொண்டாட்டம் ஒரு விசேட முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளது.
“அமெரிக்க மரைன் படையின் 251 ஆண்டுகால துணிச்சல், சேவை மற்றும் தியாகத்தை இன்றிரவு நாங்கள் போற்றுகிறோம்,” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
“பலதலைமுறைகளாக மரைன் படையினர், எமது தேசத்தைப் பாதுகாப்பதிலும், தேவைப்படும் இடங்களிலெல்லாம் களமிறங்கத் தயாராக இருப்பதிலும் அசாதாரணமான மரபொன்றைக் கட்டியெழுப்பியுள்ளனர். இங்கே கொழும்பில், அவர்கள் எமது தூதரகத்தினைப் பாதுகாத்து, அமெரிக்காவின் மிகச் சிறந்த பண்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அப்பெருமைமிக்க மரபினை எமது மரைன் பாதுகாப்புக் காவலர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். எமது நாட்டின் மீதும், ஒருவருக்கொருவர் மீதும், தாம் சேவையாற்றும் செயற்பணி மீதும் அவர்கள் கொண்டுள்ள விசுவாசமானது, செம்பர் ஃபிடெலிஸ் — எப்போதும் விசுவாசமாக எனும் மரைன் படையினரின் குறிக்கோள் வாசகத்தினை மெய்ப்பிக்கிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாவது மரைன் ஏற்பாட்டியல் குழுவின் கட்டளையிடும் ஜெனரலான பிரிகேடியர் ஜெனரல் ஓமார் ஜே. ரெண்டல் அந்த மாலைப் பொழுதின் விருந்தினர் உரையினை நிகழ்த்தினார். அறிவு, அனுபவம் மற்றும் பாரம்பரியங்கள், மரைன் படையினரின் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதைக் குறிக்கும் வகையிலான, பாரம்பரிய மரைன் படையினரின் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்வையும் இக்கொண்டாட்டம் உள்ளடக்கியிருந்தது.
கொன்டினென்டல் காங்கிரஸினால் 1775 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து, 2026 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி தனது 251 ஆவது பிறந்த நாளினை உத்தியோகபூர்வமாக மரைன் படை கொண்டாடியது. நஸ்ஸாவ் கடற்கரை முதல் ஐவோ ஜிமா, இன்ச்சோன் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை, துணிச்சலுடனும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் தேசத்தைப் பாதுகாத்து, அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் வகையில், மரைன் படையினர் உலகம் முழுவதும் பல்வேறு யுத்தங்களில் சமர் புரிந்துள்ளனர்.
அப்பெருமைமிக்க பாரம்பரியமானது, ஒவ்வோராண்டும் மரைன் படையின் பிறந்தநாள் கொண்டாட்டங்களினூடாக போற்றப்படுகிறது. மரைன் படையின் முதலாவது உத்தியோகபூர்வ பிறந்தநாள் விழாவானது வொஷிங்டன் டி.சி.யில் 1925 ஆம் ஆண்டில் நடைபெற்றபோது இந்த மரபு முறைப்படுத்தப்பட்டது. அதில் தளபதி ஜோன் ஏ. லெஜூன் அதிதியாகக் கலந்து கொண்டார்.
மரைன் படையின் வரலாற்றைக் கொண்டாடுவதற்காகவும், அதன் சேவையைப் போற்றுவதற்காகவும், 250 ஆண்டுகளுக்கும் மேலாக மரைன் படையின் வரைவிலக்கணமாகத் திகழும் மரபுகளைத் தொடர்ந்தும் நிலைநாட்டுவதற்காகவும், ஒரு நூற்றாண்டிற்குமதிகமான காலத்திற்குப் பின்னர், ஒவ்வொரு நவம்பர் மாதமும் உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும், இராணுவ தளங்களிலும் மரைன் படையினரும், அவர்களது விருந்தினர்களும் ஒன்றுகூடுகின்றனர்.

































