Nov 12, 2026 - 03:37 PM

இலங்கைக்கான செல்வாக்குமிக்க கலை மற்றும் கலாசாரத் தளத்தை உருவாக்குவதையும், நாட்டின் படைப்புத் தொழில்கள் மூலம் தீவின் அடையாளத்தை முன்னிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட சிலோன் இலக்கிய மற்றும் கலை விழா (CLAF), தனது நான்காவது பதிப்புக்குத் தயாராகி வருகிறது. இலக்கியம், கலை, இசை, திரைப்படம் ஆகிய நான்கு தூண்களின் ஊடாக இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்கும் தெளிவான நோக்கத்துடன் செயல்படும் இவ்விழா, குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
இளைய தலைமுறையினரை இந்தப் படைப்புத் துறைகளுடன் ஈடுபடுத்துவதோடு, இலங்கையின் மென் வலிமையை மேம்படுத்துவதும் இத்தளத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இலங்கையின் கதைகளும் அவற்றைச் சொல்லும் எழுத்தாளர்களும் லண்டனில் முக்கிய இடம்பிடிக்கவுள்ளனர். உலகின் முன்னணி பயணத் துறை நிகழ்வுகளில் ஒன்றான உலகப் பயணச் சந்தையில் (World Travel Market – WTM), புதன்கிழமை, 4 நவம்பர் 2026 அன்று, CLAF தனது லண்டன் பதிப்பை (London Edition) நடத்தவுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, இலக்கியம், சிந்தனைகள் மற்றும் உரையாடல்கள் வழியாகத் தீவை அறிந்துகொள்ள சர்வதேசப் பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
சிலோன் இலக்கிய மற்றும் கலை விழாவின் நிறுவனர் அஜய் வீர் சிங் கூறியதாவது: “இலங்கைக்கு வெளியே எமது தளத்தின் செயற்பாட்டை விரிவுபடுத்துவதில் லண்டன் பதிப்பு ஒரு முக்கியமான படியாகும். இது இலங்கையின் மென் வலிமையையும் மேலும் வலுப்படுத்துகிறது. இலங்கை சுற்றுலாத்துறையுடன் இணைந்து விழாவை லண்டனுக்குக் கொண்டுசெல்வது, இலங்கைக்கு ஏற்ற பயணிகளை ஈர்ப்பதற்கான எமது முக்கிய மூலோபாய இலக்காகும். பரந்த சர்வதேசப் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு கலை மற்றும் கலாசாரம் முக்கியமான ஊடகங்களாகும்.”
பேச்சாளர்கள் பட்டியலில், ஜூடி டெஞ்ச் நடித்த திரைப்படமாகத் தழுவப்பட்ட விக்டோரியா மற்றும் அப்துல் (Victoria & Abdul) நூலின் எழுத்தாளர் ஸ்ரபானி பாசு; புக்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற நாவலாசிரியர் ரொமேஷ் குணசேகர; பிபிசி (BBC One) மற்றும் ஐடிவி (ITV) தொலைக்காட்சித் தொடர்களாகத் தழுவப்பட்ட புனைகதைகளை எழுதிய லூயிஸ் டௌட்டி; நகைச்சுவை நாவலாசிரியர் அசோக் ஃபெர்ரி; மற்றும் இலங்கைக்குத் திரும்புதல் (Return to Sri Lanka) நூலின் எழுத்தாளரும் பொருளியலாளருமான ரஸீன் சாலி ஆகியோர் இடம்பெறுவர். இவர்களது படைப்புகள் வரலாறு, புனைகதை, நகைச்சுவை மற்றும் பொருளியல் ஆகிய துறைகளை உள்ளடக்கியுள்ளன. இலங்கை எழுத்தாளர்களான ரொமேஷ் குணசேகர, ரஸீன் சாலி மற்றும் அசோக் ஃபெர்ரி ஆகியோர் தீவின் கதைகளை லண்டன் பார்வையாளர்களிடம் கொண்டுசெல்லவுள்ளனர்.
சிலோன் இலக்கிய மற்றும் கலை விழாவின் இணை நிறுவனர் மற்றும் பணிப்பாளர் ஃபஸீனா ராஜாப்தீன் கூறியதாவது: “ஒரு நாடு தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்திக்கொள்வதற்கான மிகச் சக்திவாய்ந்த வழிகளில் கலாசாரமும் ஒன்று. இலங்கைச் சிந்தனைகளும் குரல்களும் மையமாக அமைந்த விழாவை நான்கு ஆண்டுகளாக உருவாக்கிய பின்னர், அந்தக் குரல்களை உலகிற்கு எடுத்துச்செல்ல விரும்பினோம். அதற்கான முதல் படியாக லண்டனைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.”
அஜய் வீர் சிங்கின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பிற்பகல் மூன்று உரையாடல்களாக அமையும். மற்றவர்களின் பார்வையில் இலங்கை (Sri Lanka through the Eyes of Others) அமர்வில், ரொமேஷ் குணசேகர மற்றும் ரஸீன் சாலியுடன் நடுவராக அசோக் ஃபெர்ரி இணைவார். ஒரு அன்பு கண்ணீர் (One Tear of Love) அமர்வில் லூயிஸ் டௌட்டியும் அசோக் ஃபெர்ரியும் பங்கேற்பர். பேரரசின் கதைகள் (Tales from the Empire) அமர்வில் ஸ்ரபானி பாசு, அசோக் ஃபெர்ரியுடன் உரையாடுவார்.
கொழும்பில் 2027 ஜனவரி 22 முதல் 24 வரை நடைபெறவுள்ள விழாவின் நான்காவது பதிப்பை லண்டன் பதிப்பு அறிமுகப்படுத்தும். மேலும், இலங்கைக்கு வருவதற்கான காரணங்களாக இலக்கியத்தையும் கலைகளையும் கருத்தில்கொள்ளுமாறு பயணத் துறை நிபுணர்களை ஊக்குவிக்கும். இலங்கை மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், திரைப்படப் படைப்பாளர்கள் ஆகியோரை இலக்கியம், கலை, இசை மற்றும் திரைப்படம் என்ற நான்கு தூண்களின் கீழ் இவ்விழா ஒன்றிணைக்கும். இளம் மற்றும் வளர்ந்துவரும் இலங்கைப் படைப்பாளர்கள் விழாவின் மையமாக இருப்பர். முழுமையான நிகழ்ச்சிப் பட்டியல், நிகழ்விடங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு விபரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். இலங்கையிலுள்ள பார்வையாளர்களுக்கு, 2027 ஜனவரியில் கொழும்பில் நடைபெறவுள்ள உரையாடல்களைப் பற்றிய முன்னோட்டத்தை லண்டன் பதிப்பு வழங்கும்.
CLAF பற்றி
சிலோன் இலக்கிய மற்றும் கலை விழா அஜய் வீர் சிங் மற்றும் ஃபஸீனா ராஜாப்தீன் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் முதலாவது பதிப்பு 2024ஆம் ஆண்டு கண்டி மற்றும் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் இவ்விழா, கதைகள், சிந்தனைகள் மற்றும் உரையாடல்களைக் கொண்டாடும் அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்வாகும். இதில் இலங்கைக் குரல்கள் மையமாக உள்ளன. விழாவின் நான்காவது பதிப்பு 2027 ஜனவரி 22 முதல் 24 வரை கொழும்பில் நடைபெறும்.
































