Nov 22, 2026 - 10:03 PM

சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பமிட்டுள்ளன.
பயணங்களை எளிதாக்குவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் (Sihasak Phuangketkeow) மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருங்கிய உறவுகளையும் உறுதிப்படுத்துவதில் இந்த விசா விலக்கு உடன்படிக்கை ஒரு முக்கிய மைல்கல் என ஜனாதிபதி திசாநாயக்க வர்ணித்துள்ளார்.
































