Nov 22, 2026 - 06:25 PM

பெருந்தோட்டங்களை மீண்டும் குத்தகைக்கு வழங்குமாறு கம்பனிகள் முன்வைத்துள்ள கோரிக்கையை, புதிய நிபந்தனைகளுடன் அரசாங்கம் அணுக வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள 25 ஹெக்டேயர் காணிகள், கோவில்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நெடுங்குடியிருப்புகள் ஆகியவற்றைத் தவிர்த்தே குத்தகைக்கு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
எதிர்கால வீடமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அக்காணிகளைப் பிரதேச செயலகங்களின் கீழ் கொண்டுவர வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை குத்தகைத் தொகையை மறுமதிப்பீடு செய்து அதிகரித்தல், தொழிலாளர்களின் சம்பளத்தை வருடாந்தம் அதிகரித்தல் மற்றும் சம்பளப் பேச்சுவார்த்தைகளில் பெருந்தோட்ட அமைச்சையும் இணைத்துக்கொள்ளுதல் ஆகிய நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்பனிகளால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படாத தரிசு நிலங்களை மீளப் பெற்றுத் தோட்டப்புற இளைஞர், யுவதிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், தேயிலை உற்பத்தியைத் தவிர்த்து நட்சத்திர விடுதிகள் போன்ற சுற்றுலாத் தொழில்களை முன்னெடுக்கும் காணிகளுக்கு அதிக குத்தகைத் தொகையை அறவிட வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளின் போது அரச தோட்டங்களை நிர்வகிக்க முடியாமல் போனதாலேயே, பெரும்பான்மைத் தொழிற்சங்கங்களின் இணக்கத்துடன் அன்று கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டதாகவும், இல்லையெனில் தோட்டங்கள் தனிநபர்களுக்குச் சொந்தமாகி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்றும் செந்தில் தொண்டமான் மேலும் குறிப்பிட்டார்.
































