Nov 22, 2026 - 04:50 PM

எல்லை தாண்டிய சைபர் நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதனையும், அவற்றில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வுப் பணியகத்தின் (FBI) மற்றும் அந்த நாட்டு நீதித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையில் மேற்கொண்ட ஒரு வார விசேட விஜயத்தை இன்று (22) நிறைவு செய்துள்ளது.
கடந்த 16ஆம் திகதி முதல் இன்று வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸாரின் பிரதான புலனாய்வுப் பிரிவுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டனர்.
இவற்றில் இலங்கைப் பொலிஸாரின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு (CCIU), மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) ஆகியன முக்கியமானவையாகும்.
அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்களை இலக்கு வைத்துச் செயற்படும் மோசடி நிலையங்கள் (Scam Centers) தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
இந்த விஜயத்தின் போது இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து, தற்போது செயற்பட்டு வரும் பிரதான இரண்டு மோசடி நிலையங்கள் தொடர்பான விசாரணை வியூகங்களை விரிவாக மீளாய்வு செய்தனர்.
அத்துடன், இலங்கைப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட 80க்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களிலிருந்து டிஜிட்டல் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டு பரிசோதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் சாட்சியப் பகுப்பாய்வு தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்குதல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை ஒடுக்குவதற்கான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வலுவான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான தொழில்நுட்ப மற்றும் சட்டப் பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சர்வதேசக் குற்றக் கும்பல்கள் பில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்து வருவதால், எல்லை தாண்டிய சட்ட அமுலாக்கக் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அதிகாரிகளின் இந்தப் பயணம் நிறைவடைந்த போதிலும், மேலதிக விசாரணைத் தடயங்களின் அடிப்படையில் செயற்பட்டுக் குற்ற வலையமைப்புகளின் செயற்பாடுகளை முழுமையாக முடக்கவும், இரு நாடுகளின் மக்களையும் பாதுகாக்கவும் அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து இணைந்து செயற்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































