Nov 22, 2026 - 03:33 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் காணியை அபகரிக்கும் நடவடிக்கையை உரிய அதிகாரிகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என அகில இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கட்சி சார்பற்ற தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தின் காணியை அபகரிக்கும் முயற்சியில் மாநகர சபை மற்றும் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தினர், குறித்த நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாகக் கைவிட வேண்டும் என இதன்போது வலியுறுத்தினர்.
அத்துடன், நாடு முழுவதும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல சாலைகள் (டிப்போக்கள்) மக்களுக்கு உரிய சேவையை வழங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, இது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் தலையிட்டு, போக்குவரத்துச் சபையை மீண்டும் முழுமையான மக்கள் சேவைக்காக இயங்க வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர்.
































