Nov 22, 2026 - 03:55 PM

1,000 தேசியப் பாடசாலைகளை உருவாக்குவதற்காக 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்துக்காக சுமார் ரூ. 1,600 மில்லியன் நிதி செலவிடப்பட்ட போதிலும், இதுவரை 22 பாடசாலைகள் மட்டுமே தேசியப் பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (COPA) கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியின் அரசாங்கக் கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் தலா 3 தேசியப் பாடசாலைகள் வீதம் மொத்தம் 1,000 தேசியப் பாடசாலைகளை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்ததாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் முழுமையாகக் கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டதுடன், இதற்காக 802 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.
ஒவ்வொரு பாடசாலைக்கும் பௌதிக வளங்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபாயும், ஏனைய உபகரணங்களைக் கொள்வனவு செய்ய ஒரு மில்லியன் ரூபாயுமாக மொத்தம் 2 மில்லியன் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
அதற்கமைய, 802 பாடசாலைகளுக்கும் ஏறத்தாழ ரூ. 1,600 மில்லியன் வரை கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், 2023ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிதி வழங்கப்பட்ட 802 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் எவ்வித முறைகேடுகளோ பிரச்சினைகளோ கண்டறியப்படவில்லை என நாலக களுவெவ சுட்டிக்காட்டினார்.
பௌதிக வள மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதியில் மதில் சுவர், நுழைவாயில் மற்றும் பெயர்ப்பலகை அமைத்தல் போன்ற பணிகள் பல பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை இன்றும் காணக்கூடியதாக உள்ளதுடன், தேவையான உபகரணங்களும் முறையாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2025ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், மேலதிகப் பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாகத் தரம் உயர்த்தும் எண்ணமில்லை எனத் தெரிவித்திருந்தார்.
அதாவது 396 பாடசாலைகளுக்கு மேல் தேசியப் பாடசாலைகளாக மாற்றுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனக் குறிப்பிடப்பட்டது.
அதன்படி, திட்டமிடப்பட்ட 802 பாடசாலைகளில் 22 பாடசாலைகள் மட்டுமே தேசியப் பாடசாலைகளாக ஏற்கப்பட்டுள்ளன என்றும், தற்போதுள்ள 396 தேசியப் பாடசாலைகளில் புதிதாக இணைக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளும் உள்ளடங்கும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
































