Nov 22, 2026 - 01:41 PM

2027 ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாதிருந்த முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் இணைந்து முன்பள்ளிகளுக்கான பொதுவான பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அது தொடர்பான தேவையான பயிற்சி நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அப்பால் சென்று, மக்கள் எதிர்பார்த்த சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்கான ஆரம்ப அணுகுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதலாவது இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கே கவனம் செலுத்தியதாகவும், தற்போது அந்த இலக்கு ஓரளவிற்கு எட்டப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஆண்டில் நாட்டில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எதிர்பார்ப்பு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரச சேவையை வினைத்திறனாக்குதல், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண் தொழில்முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்வதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன மேலும் தெரிவித்தார்.
































