Nov 22, 2026 - 12:23 PM

அமெரிக்கப் புலனாய்வுப் பணியகத்தினால் (FBI) மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் மன்னன், மெக்சிகோ அதிகாரிகளுடனான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பவுஸ்டோ இசிட்ரோ "சாப்போ இசிட்ரோ" மேசா புளோரஸ் மற்றும் ஏழு பேர் சினலோவாவின் குவாசாவே நகரில் மெக்சிகோ விசேட படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது ஏழு சந்தேகநபர்கள் கொல்லப்பட்டதுடன், குவாசாவேயில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகச் சென்று கொண்டிருந்த மெக்சிகோ இராணுவ வீரர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளதாக அச்செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேசா புளோரஸ் மெக்சிகோவில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவை பென்டானில், கொக்கெய்ன், ஹெரோயின் மற்றும் ஏனைய ஆபத்தான போதைப்பொருட்களால் நிரப்பியதாக" FBI ஆல் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து அவரிடமிருந்து வந்த அழுத்தங்களைத் தொடர்ந்து, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மெக்சிகோ தீவிரப்படுத்தியுள்ளது.
குவாசாவே கார்டெல் (Guasave Cartel) என்றும் அழைக்கப்படும் மேசா புளோரஸ் அமைப்பின் தலைவரான மேசா புளோரஸ், 1990-கள் முதல் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகக் கருதப்பட்டாலும், தன்னைப் பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்திருந்ததன் மூலம் இதுவரை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வந்தார்.
அவர் தங்கியிருந்த இடம் குறித்த அமெரிக்க உளவுத்துறைத் தகவல்களைப் பயன்படுத்தி, மெக்சிகோ விசேட படையினர் மிகவும் இரகசியமாகவும் அதிரடியாகவும் அவ்விடத்தைச் சுற்றிவளைத்து, அவர் தப்பிச் செல்வதையும் அவருக்கு ஆதரவாகப் படைகள் வருவதையும் தடுக்கும் வகையில் பாதுகாப்பு வேலியை அமைத்ததாக மெக்சிகோ பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த வளாகத்திற்குள் நுழைந்து மேசா புளோரஸைக் கைது செய்வதற்கு முன்னர் படையினர் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அச்செயலகம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.
குவாசாவேயில் ஹெலிகப்டர்கள் தரையை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்துவதைப் போன்ற காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
ஏனைய காணொளிகளில், பேஸ்பால் (baseball) மைதானத்தில் இருந்த மக்கள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டுத் தப்பி ஓடுவதைக் காண முடிகிறது.
மேசா புளோரஸின் இரண்டாம் நிலைத் தலைவரும் அவரது உறவினருமான ஒருவரும், அக்குழுவின் நிதிச் செயற்பாட்டாளரான அவரது மைத்துனரும் உட்பட மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
































