Nov 22, 2026 - 01:06 PM

கடந்த வருடமும் இவ்வருடமும் தபால் சேவைக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தைக் கடந்துள்ளதாக வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன இதனைத் தெரிவித்தார்.
எனினும், தபால் திணைக்களத்தை ஒட்டுமொத்தமாக இன்னும் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, தபால் சேவையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களில் தபால் சேவையை அபிவிருத்தி செய்வதற்காகப் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சில நாடுகளில் தபால் சேவை முழுமையாக மூடப்பட்டுள்ளது. ஆனால், தபால் சேவையை நாம் பலமாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
தபால் சேவையில் நாம் கடந்த வருடமும் இவ்வருடமும் எமது இலக்கு வைக்கப்பட்ட வருமானத்தைத் தாண்டியுள்ளோம்.
எனினும், தபால் சேவையை ஒட்டுமொத்தமாக எம்மால் இலாபமீட்டும் நிலைக்கு இன்னும் கொண்டு வர முடியவில்லை.
அதற்குப் பிரதான காரணம், சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்காகச் செலுத்தப்படும் பாரிய செலவினமாகும்.
அவ்வாறாயின் எமக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன, ஒன்று, அரச சேவைக்கு இந்தத் தேவையற்ற சுமை அவசியமில்லை எனக் கருதி அதனை முடக்கிவிடுவதாகும்.
ஆனால், நாம் அதற்குப் பதிலாக அரச சேவையைப் பலப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அப்படியானால், இந்தத் தபால் சேவையைத் தொடர்ந்தும் ஒரு சேவையாக முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களது பங்களிப்பு என்ன? நீங்கள் ஒரு இலக்கை நோக்கிப் பணியாற்ற வேண்டும்.
நீண்ட காலத்திற்கு இதனை இப்படியே கொண்டு செல்ல முடியாது. எனவே, இலாபமீட்டக்கூடிய துறைகளை அடையாளம் கண்டு, அவற்றில் அதிகளவில் முதலீடு செய்து தபால் சேவையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
































