Nov 22, 2026 - 01:21 PM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

"எனது மகள் கடத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாக யாராலோ எங்காவது அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை" என, கடந்த 26 நாட்களாகக் காணாமல் போன தனது மகளைத் தேடிவரும் தந்தையான தெய்வேந்திரா தேவகுமாரன் கவலை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (21)மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது காணாமல் போன மாணவியின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தந்தை மேலும் குறிப்பிடுகையில், "கடந்த 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி காலை சுமார் 9.00 மணியளவில், அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் எனது மகளைக் கொண்டு சேர்த்துவிட்டுச் சென்றேன். பிற்பகல் 1.00 மணிக்கு வகுப்பு முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 4.00 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சி.சி.டி.வி (CCTV) காணொளிகளைப் பரிசீலித்த போதிலும், குறிப்பிட்ட வீதியைத் தாண்டிச் செல்வது வரை மட்டுமே கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரியவில்லை" என வேதனை தெரிவித்தார்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியதாகவும், அங்கிருந்து பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும், விசாரணையில் எதிர்பார்த்த வேகம் காணப்படாததாலேயே ஊடகங்கள் வாயிலாக இவ்விடயத்தை வெளிப்படுத்த முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தனது மகள் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்த்திருந்ததோடு, ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைகளுக்காகவே சுயவிருப்பத்தின் பேரில் அக்கல்லூரியில் இணைக்கப்பட்டார் எனக் கூறிய அவர், தமது மகள் எவ்விதத் தவறான பழக்கவழக்கங்களோ, அச்சமோ இன்றித் துணிச்சலாகப் பழகக்கூடியவர் என்றும், வற்புறுத்தலின் பேரில் எங்காவது கடத்தி வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.
ஏனைய பகுதிகளிலும் இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் பதிவாகி வருவதால் தமது குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும், எனவே பொலிஸார் இவ்விவகாரத்தைத் தீவிரமாக ஆராய்ந்து தனது மகளை விரைந்து மீட்டுத் தருமாறும் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
































