Nov 22, 2026 - 02:32 PM

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகளின் அபாயகரமான வளைவுகள் மற்றும் செங்குத்தான சரிவுகளைக் கொண்ட இடங்களில் பாதுகாப்பு இரும்பு வேலிகளை அமைக்கும் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நோர்வூட் அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச தரம் மற்றும் தொழில்நுட்பத்துக்கு அமைவாக இந்தப் பாதுகாப்பு வேலிகள் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கித்துல்கல முதல் தலவாக்கலை வரையான பகுதியிலும், தலவாக்கலை - பூண்டுலோயா வீதியிலும், கினிகத்தேனை - தியகல ஊடான சிவனொளிபாத மலை வீதியிலும் அமைக்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் 10.5 கிலோமீற்றர் தூரத்துக்கு இரும்பு வேலிகளை அமைத்து முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்தார்.
குறித்த வீதிகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் ஆரம்பமாவதற்கு முன்னதாக இதன் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இரவு நேரங்களில் இந்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்குப் பாதுகாப்பு வேலிகள் தெளிவாகத் தெரியும் வகையில், அவற்றிலிருந்து ஒளி வீசும் சமிக்ஞைகளும் பொருத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
































