May 27, 2025 - 11:28 AM -
0
காலங்காலமாக உறவு முறைகளிலும் அவர்களுடைய வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஆனால் பகவத் கீதை எல்லா காலத்துக்குமாக புனித நூலாகவும் எல்லா உறவு ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாகவும் இருக்கிறது.
காதல் மற்றும் திருமண உறவில் மாட்டிக்கிட்டு நிறைய கஷ்டப்படறீங்களா? அப்போ பகவத் கீதையில் சொல்லப்பட்ட இந்த 4 விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணுங்க. உங்க இல்லற வாழ்க்கையில் வசந்தம் வீசும்.
பகவத் கீதையை ஒரு மதம் சார்ந்த நூலாகப் பார்ப்பதை விட வாழ்க்கையின் அர்த்தங்களை சொல்லித் தரும் ஞான நூலாகத் தான் பார்ப்பது தான் சரியாக இருக்கும். பகவத் கீதை என்றாலே அது சுய விழிப்புணர்வு, பற்று இல்லாமல் இருத்தல், கடமையை மட்டும் சரியாக செய்து கொண்டே இருப்பது ஆகியவற்றை அடிப்படையாக சொல்லித் தருகிறது. 18 அத்தியாயங்களும் 700 வசனங்களும் கொண்ட நூல் இது.
அன்றாட சவால்கள், உறவுகளை மேம்படுத்துதல், திருமண வாழ்க்கையில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்வது, மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கு என பல விதங்களில் வழிகாட்டும். அதில் சில முக்கிய வசனங்களை இங்கே பார்க்கலாம்.
மனதையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துங்கள்
இந்த வசனத்தை புரிந்து கொண்டால் திருமண உறவுகளில் மட்டுமல்ல, எல்லா வகையான உறவுகளுமே சிக்கல் இல்லாமல் இருக்க இது உதவும். இதுபற்றி பகவத் கீதையின் 6 வது அத்தியாயம் 5 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
திருமண வாழ்க்கையில் ஒருவரின் பொறுமையும் உணர்ச்சிக் கட்டுப்பாடும் தான் அதிகமாக சோதனைக்கு உள்ளாகும்.
உணர்ச்சியின் மேலீட்டால் உங்கள் கோபத்தையோ விரக்தியையோ கட்டுப்படுத்த முடியாவிட்டால் சின்ன சின்ன பிரச்சினைகள் கூட பெரிய பிரச்சினையாக மாறிவிடும்.
உங்கள் உறவு இனிமையாக, பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் உங்கள் மனம் உணர்ச்சி வசப்படாமல் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
அகங்காரம் கூடாது
திருமண உறவில் விரிசலும் சண்டைகளும் பிரிவும் வருவதற்கு அடிப்படை காரணம் இந்த ஈகோ தான்.
எல்லா விஷயங்களும் விதிகளுக்கு உட்பட்டு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும், விவாதங்கள் வந்தால் அதில் நான் தான் ஜெயிக்க வேண்டும் அல்லது நான் சொல்வதை தான் என் கணவரோ மனைவியோ கேட்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் அங்கு உறவில் விரிசல் உண்டாகத் தொடங்குகிறது.
ஈகோவை விட்டு விடுங்கள். பணிவோடு இருவரும் ஒருவரை ஒருவர் மன்னிக்கவும் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். இந்த ஈகோ எப்படி உறவை பாதிக்கும் என்பது பற்றி பகவத் கீதையின் 2 அத்தியாயம் 70 ஆவது வசனம் குறிப்பிடுகிறது.
துணையிடம் உள்ள அற்புதத்தை பாருங்கள்
இல்லற வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களின் வெளிப்புறத்தில் இருக்கும் தன்மை, குணங்கள், வெளிப்படுத்தும் வார்த்தை ஆகியவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்வது தான்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதாவது சில தனித்துவமான அற்புத குணங்கள் இருக்கும். அப்படி உங்கள் துணையிடம் இருக்கும் அற்புதத்தை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் இதைவிட அழகான வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் என்று உணர்வீர்கள்.
இறுதியான ரகசியம்...
எப்போதும் எல்லோரும் தனக்கு யார் என்ன செய்தார்கள் என்று தான் கணக்கு போடுவார்கள். ஆனால் காதல் உறவில் அதை மட்டும் செய்யாதீர்கள்.
உங்கள் துணை உங்களுக்கு என்ன செய்தார் என்று ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு நீங்கள் ஒரு கணவராகவோ அல்லது மனைவியாகவோ நீங்கள் செய்ய வேண்டிய கடமையை அவர்களுக்கு செய்து கொண்டே இருங்கள்.
வாழ்க்கைத் துணையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லா வகையில் திருப்திப் படுத்துகிறவர்கள் தான் உலகின் தலைசிறந்த துணையாக இருக்க முடியும். இப்படியொரு செய்தியை பகவத் கீதையின் 18 வது அத்தியாயத்தில் 47 வசனம் சொல்கிறது.
இறுதியாக,
எந்த மதத்தின் புனித நூலாக இருந்தாலும் அதை அந்த மதத்துக்கு உரியதாக மட்டுமே பார்ப்பது மிகத் தவறு. அது இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் மனித குலத்துக்கும் ஏதாவது கற்றுக் கொடுக்கும். அதில் ஒன்று தான் பகவத் கீதை. ஒரு துணையாக உங்கள் கடமையை நிறைவேற்றுவது, உங்கள் துணையுடனான உங்கள் உறவை வலுப்படுத்த உதவுகிறது. உங்கள் திருமண உறவை எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.