பல்சுவை
கணவன் மீது மனைவி குற்றச்சாட்டு - அசந்து போன பொலிஸ்

Jun 14, 2025 - 11:59 AM -

0

கணவன் மீது மனைவி குற்றச்சாட்டு - அசந்து போன பொலிஸ்

பொதுவாக தகராறு, மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற பல காரணங்களுக்காக காவல்நிலையத்திற்கு வழக்குகள் வந்துள்ளன. ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று இந்தியாவின் உத்தரபிரதேச மாநில காவல்நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் மற்றும் பாராட்டுகளை பெறுவதற்காக வினோதமான முறையில் சிந்தித்து வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், குடும்பத் தலைவி ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பது, அதனை எடிட் செய்து பதிவிடுவது என சமூக வலைத்தளத்தில் எந்நேரமும் பிசியாக இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இதையடுத்து காவல்நிலையத்திற்கு இவர்களின் தகராறு சென்றுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார். 

 

தனது மனைவி சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. அவள் எப்போதும் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது என மும்முரமாக இருப்பதால் எங்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதமாகிறது. எந்நேரமும் மொபைல் போனிலேயே இருக்கிறாள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கணவர் முன்வைத்தார்.

 

வீடியோ எடுத்து எடிட் செய்து பதிவிடுவது மற்றும் வீட்டுப் பொறுப்புகள் இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ரீல்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டும் இல்லை. அவை இப்போது என் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். வீட்டு வேலை காரணமாக எனது வீடியோக்களை பதிவிட தவறவிடும்போது, என்னை பின்தொடர்பவர்களை இழந்துவிடுகிறேன். மேலும் எனது தொடர்பு குறைகிறது. இது ஒரு சிறு வணிகத்தை நடத்துவது போன்றது, யாரும் என்னுடைய அழுத்தத்தைப் புரிந்துகொள்வதில்லை என்று கூறினார்.

 

இதையடுத்து இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட பொலிஸார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 

இச்சம்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இணையத்தால் குடும்ப உறவுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments
0

MOST READ