Jun 23, 2025 - 11:04 AM -
0
காபி, டீ போன்ற வழக்கமான பானங்களுடன் நாளை தொடங்குவதற்கு பதிலாக ஒரு கோப்பை சங்குப்பூ தேநீருடன் உங்களுடைய நாளை துவங்குவது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு நன்மைகள் உள்ளன.
சங்குப்பூ பார்ப்பதற்கு நீல நிறத்தில் அழகாக இருக்கும். அதைப் போல இதன் மருத்துவ குணங்களும் வியக்க வைக்க கூடியவை. இதில் உள்ள குணப்படுத்தும் ஆற்றல் உங்களுடைய பல்வேறு நோய்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
சிறுநீரகங்கள் ஆரோக்கியம்
சங்குப்பூவில் உள்ள பண்புகள் டையூரிடிக் மருந்து போல செயல்படுகிறது. இதனால் உங்களுடைய சிறுநீர் வெளியேற்றம் மேம்படுகிறது. கழிவு நீர் மண்டலத்தில் உள்ள நச்சுக்களை நீக்க சங்குப்பூவின் பண்புகள் உதவுகின்றன. ஏற்கனவே நீரிழப்பு பிரச்சனைகள் இருந்தால் தினமும் காலையில் சங்குப்பூ டீ குடிக்கலாம். இந்த டீ சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவக்கூடிய சிறந்த வழியாகும்.
பண்டைய கால மருத்துவத்தில் இந்த தேநீரை நினைவக அமுதம் என்று கூறுவார்கள் இதனுடைய இதழ்களின் அடர் நீல நிறத்தை தருவதற்கு இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள் காரணமாக உள்ளன. சங்கு பூவின் இதழ்கள் நினைவாற்றலையும், அறிவாற்றலையும் மேம்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் காலையில் காபின் அல்லாத பானத்தை எடுத்துக் கொள்வது மூளைக்கு சுறுசுறுப்பை வழங்கக் கூடியது. சங்குப்பூ டீ அருந்துவதால் உங்களுடைய நாள் அற்புதமாக தொடங்கும்.
கண் ஆரோக்கியம்
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பொழுதுபோக்கு, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக செல்போன், மடிக்கணினி, டிவி போன்றவற்றை மக்கள் அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். இதனால் கண்கள் சோர்வடைகின்றன. சங்குப்பூ டீ குடிப்பதால் கண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆயுர்வேதத்தில் இந்த பூக்களின் இதழ்கள் பார்வையை மேம்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மன அழுத்தத்தை குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. சங்குப் பூவில் உள்ள புரோந்தோசயனிடின்கள் கண்களின் நுண்குழாய்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
எடை குறைப்பு
இந்த டீயை குடிப்பதால் எடையை கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கான சான்றுகள் குறைவானதாகவே இருந்தாலும், உடலில் குளுக்கோஸ் ஒழுங்குமுறைக்கு இந்த டீ உதவுகிறது. வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
சர்க்கரை நோய்
சில ஆய்வுகளில் சங்குப்பூ டீயை உணவுக்கு பின் அருந்துவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக உயர்வதை குறைப்பதாக தெரியவந்துள்ளது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த டீயை வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் இந்த டீ குடிப்பவர்கள் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தக்கூடாது. மருத்துவர் ஆலோசனையின் படி பரிந்துரைத்த மருந்துகளையும் உண்ண வேண்டும்.
நாள்பட்ட நோய்கள்
இந்த டீ குடிப்பதால் மூட்டு வலி, இதய பிரச்சனைகள் உள்ளிட்ட நாள்பட்ட பல்வேறு நோய்களும் குறைகின்றன. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் நிறைந்துள்ளன வீக்கத்தைக் குறைக்க உதவும் அருமருந்து.
சங்குப் பூ டீ செய்முறை
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 5 முதல் 6 சங்குப் பூக்களை போடுங்கள். இவை தண்ணீரில் வெந்து அதன் நிறம் மாறும். பின் பூக்களை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து அருந்தலாம். சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்க்க வேண்டும்.