Jun 24, 2025 - 11:27 AM -
0
திருமணமான ஒரு மாதத்தில் கணவரை கூலிப்படை ஏவி கழுத்தறுத்து அவரது மனைவி கொலை செய்துள்ளார்.
இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர் (32), தனியார் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த மே 18 ஆம் திகதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.
இந்நிலையில் திருமணத்திற்கு 5 நாட்கள் இருந்த நிலையில் கடந்த மே 13 ஆம் திகதி ஐஸ்வர்யா திடீரென காணவில்லை.
அவர் காதலனுடன் ஒடிவிட்டதாக தகவல் பரவியது. இந்தநிலையில் மே 16 ஆம் திகதி திடீரென ஐஸ்வர்யா வீடு திரும்பினார். பின்னர் தேஜேஷ்வருக்கு அழைப்பை மேற்கொண்டு, ‘நான் யாரையும் காதலிக்கவில்லை, வரதட்சணை கொடுக்க முடியாமல் எனது பெற்றோர் தவித்து வருகின்றனர். இதை தாங்க முடியாமல்தான் எனது தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’ எனக்கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து மே 18 ஆம் திகதி தேஜேஷ்வர்-ஐஸ்வர்யா இருவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து 2 ஆவது நாளில் இருந்தே ஐஸ்வர்யா, தேஜேஷ்வரை புறக்கணித்து வந்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா அடிக்கடி தொலைபேசியில் யாரிடமோ பேசியுள்ளார். இதை தேஜேஷ்வர் கண்டித்ததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதியில் இருந்து தேஜேஷ்வர் காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேஜேஷ்வரின் சகோதரர் கட்வால் பொலிஸில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தேஜேஷ்வரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி பன்யம் அருகே உள்ள சுகலிமெட்டா என்ற இடத்தில் தேஜேஷ்வர் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக ஐஸ்வர்யா, அவரது தாயார் சுஜாதா ஆகியோர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பொலிஸார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அதிரச்சி தகவல்கள் தெரிய வந்தது.
ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதா கர்னூலில் உள்ள ஒரு வங்கியில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். அதே வங்கியில் பணிபுரியும் ஊழியருடன் சுஜாதாவிற்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. அந்த ஊழியருடன் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
திருமணத்திற்கு பின்பும் ஐஸ்வர்யா, வங்கி ஊழியருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதை தேஜேஷ்வர் கண்டித்ததால் அவரை கொலை செய்ய ஐஸ்வர்யா, வங்கி ஊழியருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதன்படி வங்கி ஊழியர், கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து தேஜேஷ்வரை கொல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து கூலிப்படையினர் சிலர் கடந்த 17 ஆம் திகதி தேஜேஷ்வரிடம் சென்று ‘நாங்கள் 10 ஏக்கர் நிலம் வாங்க உள்ளோம். அந்த நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும்’ எனக்கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, தேஜேஷ்வரை சரமாரி தாக்கியுள்ளனர். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேஜேஷ்வர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது சடலத்தை பன்யம் அருகே உள்ள சுகலிமெட்டுவில் வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. திருமணமான ஒரு மாதத்தில் மட்டும் ஜஸ்வர்யா, வங்கி ஊழியருடன் 2,000 முறை தொலைபேசியில் பேசியுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து பொலிஸார் ஐஸ்வர்யாவை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக வங்கி ஊழியர் மற்றும் கூலிப்படையினரையும் தேடி வருகின்றனர்.