பல்சுவை
என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய்!

Jun 26, 2025 - 06:51 PM -

0

என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய்!

மேகாலயாவில் நடைபெற்ற தேனிலவு கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தார். 

 

இதில் தொடர்புடைய கூலிப்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

 

இதேபோன்று ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, மணப்பெண்கள் பற்றிய விவரங்களை கண்டறிவதற்காக மணமகன் குடும்பத்தினர்கள் துப்பறியும் நிறுவனங்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாக துப்பறியும் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

 

இந்த நிலையில், திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்' என்று முக்காடுக்கு கீழே கத்தியை வைத்துக்கொண்டு மனைவி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு,

 

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த நிஷாத் என்பவருக்கும் சித்தாரா என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்புக்கு அடுத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் சென்ற அறைக்கு நிஷாத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

சித்தாரா, முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். நான் அவனுக்கு சொந்தம்' என்று முக்காடுக்கு கீழே கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். மேலும் அன்று இரவு முழுவதும் சித்தாரா கத்தியுடன் படுக்கையில் இருந்ததாகவும், அதிர்ச்சியில் உறைந்த நிஷாத் இரவு முழுவதும் உயிருக்கு பயந்து தூங்கவில்லை. இது தொடர்ந்து 3 நாட்களுக்கு நடந்துள்ளது.

 

இதனால் மன அழுத்தத்தில் இருந்த நிஷாத், நடந்தவற்றை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் சித்தாரா மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது சித்தாரா, பெற்றோர் வற்புறுத்தியதால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர் சமரசம் பேசி நிஷாத்துடன் வாழும் படி கூறியுள்ளனர். இருப்பினும் சித்தாரா, நிஷாத் வீட்டில் இருந்து சுவர்ஏறி குதித்து ஓடியுள்ளார். இதனால் நிஷாத் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக நிஷாத் கூறுகையில், நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டால், அது திருமணத்தின் அர்த்தத்தை உண்மையிலேயே புரிந்து கொண்ட ஒருவராக இருக்க வேண்டும். சித்தாரா என்னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் என் உயிருக்கு பயந்தேன். அவள் திரும்பி வந்தால், நான் அவளுடன் மீண்டும் வாழ முடியாது என்று நினைக்கிறேன். அந்த பயம் இன்னும் நீங்கவில்லை என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05