Jun 29, 2025 - 12:20 PM -
0
இந்தியாவின் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி சுமங்கலா (43).
திப்தூர் நகரில் உள்ள கல்பதரு கல்லூரியின் பெண்கள் விடுதியில் சமையல்காரராக சுமங்கலா பணிபுரிந்து வந்தார். அதே விடுதியில் சமையல் உதவியாளராக கரடலு சாந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏறப்பட்டது. 2 பேரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விஷயத்தை அறிந்த சங்கரமூர்த்தி மனைவி சுமங்கலாவை கண்டித்தார். இது பற்றி சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவிடம் தெரிவித்தார். தகாத உறவுக்கு சங்கரமூர்த்தி ஒரு தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய சுமங்கலாவும், நாகராஜுவும் ஒரு திட்டத்தை வகுத்தனர்.
அதன்படி கடந்த 24 ஆம் திகதி இரவு சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். பண்ணை வீட்டில் சங்கரமூர்த்தி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது கால்களை நாகராஜூ இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
சுமங்கலா, கணவரின் கண்களில் மிளகாய் பொடி, உப்பு பொடி கலந்து ஊற்றினார். இதனால் சங்கரமூர்த்தி சத்தம் போடவே, அவரை கம்பால் அடித்து அவரது கழுத்தை மிதித்து துடிக்க, துடிக்க சுமங்கலா கொலை செய்தார்.
பின்னர் சுமங்கலாவும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியின் உடலை ஒரு சாக்குப் பையில் அடைத்து, சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள துருவேகெரே தாலுகாவில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொண்டு சென்று அங்கே வீசினர். பின்னர் எந்த சந்தேகமும் ஏற்படாதபடி இருவரும் கிராமத்திற்கு திரும்பினர்.
இதையடுத்து சுமங்கலா தனது கணவர் மாயமானதாக நோனவினகெரே பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சங்கரமூர்த்தி மீது காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
முதலில் சுமங்கலாவின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆராய்ந்த பொலிஸார் சுமங்கலாவின் கள்ளக்காதல் மற்றும் கொடூரமான சதித்திட்டத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து சங்கரமூர்த்தியின் பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சங்கரமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் மிளகாய், உப்பு பொடி மற்றும் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டன.
இதனால் பொலிஸார் சுமங்கலாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியை கொலை செய்ததை சுமங்கலா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பொலிஸார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சங்கரமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மனைவி மிளகாய், உப்புப் பொடியை ஊற்றி, அவரது கழுத்தை மிதித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.